காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு, ‘வேற லெவல்’ மரியாதை செய்த திருவண்ணாமலை கலெக்டர்!!

திருவண்ணாமலையில் வைரஸ் தடுப்பு பணியின்போது, மனிதநேயம் காத்த தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணிக்கு சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, சல்யூட் அடித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கெளரவப்படுத்தினார்.
நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அதில் தெள்ளாறு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அல்லிராணி, ஏரிப்பட்டு பகுதியில் கரும்புத் தோட்டத்தில் மின்சாரம் வேலி தாக்கி உயிரிழந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை தூக்கி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு அப்பகுதி மக்களை காவல் ஆய்வாளர் அல்லிராணி அழைத்தபோது வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்று அஞ்சி அனைவரும் வர மறுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அல்லிராணி மனித நேயத்துடன் செயல்பட்டு, ஆட்டோ ஓட்டுனரின் உதவியோடு உயிரிழந்த மாற்றுத்திறனாளி அமாவாசையை தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த செயலைப் பாராட்டி சுதந்திர தின விழாவின்போது மாவட்ட ஆட்சியர் நிற்கும் இடத்தில் அல்லிராணியை நிற்கவைத்து கீழே இறங்கி வந்து சல்யூட் அடித்து கெளரவப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் இந்த செயல் அனைத்து காவலர்களின் பணியையும் பெருமை அடையச் செய்தது.