பாறை இடுக்கில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்த கரடி!.

நீலகிரி வனக்கோட்டம் கட்டபெட்டு வனச்சரகம், பேரகணி பீட், கப்பட்டி பள்ளியாடா பகுதியில், தேயிலை தோட்டத்தில் எறும்பை உண்பதற்காக ஐந்து வயதுடைய பெண் கரடி, மண்ணை கிளறியுள்ளது.
மழையால், நிலம் ஈரம் கண்டுள்ள நிலையில், பாறை சறிந்து விழுந்து, கரடியின் வலது கால், பாறை இடுக்கில் சிக்கியுள்ளது. வெளியே வர, கரடி முயற்சித்தும் முடியாததால், நீண்ட நேரம் துடித்துள்ளது.
தகவல் அறிந்த கட்டபெட்டு வனவர்கள் பெலிக்ஸ், சசிதரன், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சிவக்குமார், பூபதி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கவுதம் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று கரடியை மீட்க முயற்சித்தனர். பெரிய பாறை என்பதால், வனத்துறையினரால் கரடியை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த தகவலின்படி, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா மற்றும் ஏ.சி.எப்., சரவணக்குமார் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தி, உயிருடன் மீட்க முயற்சித்தனர். ஆனால் நீண்ட நேரமாக, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல், படுக்காயத்துடன் துடிதுடித்த கரடி, பரிதாபமாக உயிரிழந்தது. பிறகு, கால்நடை மருத்துவர்களின் பிரேத பரிசோதனைக்கு பின், அதே இடத்தில் எரியூட்டப்பட்டது.