“இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம்; தமிழோ பேரடையாளம்.!” இந்தி திணிப்பு குறித்து வைரமுத்துவின் ஆதங்க அறிக்கை!
சென்னை விமான நிலையத்தில் நீங்கள் இந்தியரா என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேட்கப்பட்ட கேள்வி, மொழி தேசியவாதிகளின் மூளைக்குள் தீப்பந்தம் எறிவதைத் தவிர்க்க முடியுமா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில், “இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா” என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது. இந்த வினாவைப் போகிற போக்கில் புறந்தள்ளமுடியாது. ஓர் அதிகாரியின் தனிக் குரல் என்று இதை எடுத்துக் கொள்ளமுடியாது. ஆதிக்கத்தின் அம்பறாத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது.
தலையால் சிந்திக்கிற யாரும் இப்படி ஒரு வினாவை வீசியிருக்க முடியாது. மீண்டும் எங்கள் நெருப்பு தன்மீது பூத்திருக்கும் நீறுகளைக் காற்றில் ஊதிக் கங்கு காட்ட வேண்டிய காலம் இது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நோக்கி மட்டும் கேட்கப்பட்ட கேள்வியன்று இது. வடக்கின் விரல் தெற்கை நோக்கி நீண்டு கேட்கும் நீண்ட காலக் கேள்வி இது.
1937 முதல் 83 ஆண்டுகளாய் உயர்த்திப் பிடிக்கப்பட்ட எங்கள் கேடயத்தின் மீது அம்புகள் பாய்ந்தது போய் இப்போது தோட்டாக்கள் தொட்டுப் போகின்றன என்பதற்கு இந்த வினா விடையில்லாத ஒரு விடைத்த சாட்சி. இந்தியா தனி நாடன்று; இந்தியன் என்பதும் ஆதிச்சொல் அன்று. கிழிந்து கிடந்த கந்தல் தேசங்களை வெள்ளையர் வாளால் தைத்ததுதான் நிலவரலாறு. அவர்கள் தொகுத்த தேசத்தை வகுத்துக் கொண்டதுதான் நம் அரசியல் வரலாறு.
இந்தியா மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது எதை அளவு கோலாகக் கொள்வது என்று கருதிய அறிஞர்கள், இனம் என்பதையோ, நிலம் என்பதையோ கருதாமல் மொழிதான் அளவு கோல் என்று மூளையைச் செதுக்கி முடிவெடுத்தார்கள். அப்படித்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன. எந்த மொழிகள் இந்தியாவைப் பகுப்பதற்குப் பயன்பட்டனவோ அதே மொழிகள்தாம் இணைப்பதற்கும் பயன்பட வேண்டும் என்பதல்லவோ ஒருமைப்பாட்டின் உயிர்த்தலம்! அதை மீறி ஒரு மொழி மட்டும் தான் இந்தியாவின் திருமொழி என்றும் மற்ற மொழிகளெல்லாம் வெறும் வட்டார மொழிகளென்றும் காலப் போக்கில் அவைகளெல்லாம் கரைந்தொழிந்து இந்தியாவின் ஒற்றை அடையாளமாய் இந்தியே திகழவேண்டுமென்றும் ஆதிக்க வெறியர்கள் கருதினால் அது இந்தியாவின் கபாலத்தின் மீது இறங்கும் கார்கால இடியல்லவா?
1961ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1652 தாய்மொழிகளைக் கொண்ட இந்தப் பரந்துபட்ட நாட்டை ஒரு சிமிழுக்குள் அடைக்கச் சிந்திப்பது சரியா? இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகமொழிகளில் சரிபாதி காற்றில் புதைக்கப்பட்டு விடும் என்று அச்சுறுத்தும் ஐ.நாஅறிக்கை, அதில் பாதி மொழிகள் இந்திய மொழிகள் என்று போகிற போக்கில் புளி கரைக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் விமான நிலையத்தில் காதில் அறையப்பட்ட கேள்வி இருதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது. இந்தியின் மேலாதிக்கத்தால் ராஜஸ்தானி, போஜ்புரி போன்ற மொழிகள் நாவறுக்கப்பட்டுக் கொண்டிருப்பது நமக்குக் கவலை தருகிறது. வடக்கே அடிக்கப்பட்ட இந்த மொழிக் கொள்ளை தெற்கு நோக்கித் திரும்புவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? இந்தக் கேள்வி மொழித் தேசியவாதிகளின் மூளைக்குள் தீப்பந்தம் எறிவதைத் தவிர்க்க முடியுமா?
தமிழர்களின் பரந்த நிலப்பரப்பை ஆழி அலைகள் விழுங்கியிருக்கின்றன. பேரினம் பேசிய பெருமொழியை அந்நிய மொழிகள் புகுந்து திரித்துக் கரைத்திருக்கின்றன. மொழியிழந்த வழியெல்லாம் தமிழன் நிலமிழந்திருக்கிறான்; நிலமிழந்த வழியெல்லாம் தமிழன் அரசிழந்திருக்கிறான்; அரசிழந்த வழியெல்லாம் தமிழன் அதிகாரம் இழந்திருக்கிறான்; அதிகாரம் இழந்த வழியெல்லாம் தமிழன் உரிமை இழந்திருக்கிறான்; உரிமை இழந்த வழியெல்லாம் தமிழன் உயரம் இழந்திருக்கிறான். ஆண்ட இனம் அடிமை இனம் ஆனதற்கு மூலமே மொழிதான்.
இந்திய மொழிகளுக்கென்று மைய நிறுவனத்தையும், பாஷா ஆய்வு நிறுவனத்தையும் பேணி வளர்ப்பது பெரிதில்லை. மொழிகளின் இனங்களையும், இனங்களின் மொழிகளையும் மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தோ-ஆரிய மொழிகளென்றும், திராவிட மொழிகளென்றும், ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிகளென்றும், திபெத்தோ-பர்மிய மொழிகளென்றும் இந்திய மொழிகளை நான்கு வகைப்படுத்துகின்றனர் மூத்த மொழியாளர்கள். மொழிப் பகுப்பு என்பது ஒலிப்பகுப்பு மட்டுமன்று; அது கலாசாரக் கட்டமைப்பு; மானுடவியல்-நிலவியல் சார்ந்த ஒலி அறிவியல்.
இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் சம உரிமை 22 இந்திய மொழிகளுக்கும் வழங்கப்படுவதுதான் இந்தியாவை இணைத்திருக்கும் கயிற்றை இற்றுப் போகாமல் கட்டிக் காக்கும். ஆனால், இந்தி மொழிமட்டும் தான் இந்தியாவை ஆளப் பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா?
ஒரு நிகழ்வுசொல்கிறேன். இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்தவாரம் தொலைபேசியில் என்னோடு பகிர்ந்து கொண்ட பதிவு அது. சொன்னால் என்னைப்போலவே நீங்களும் அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். அவர் நிதியமைச்சராக இருந்த பொழுது ஒரு நிதிநிலை அறிக்கையின் கலந்துரையாடலுக்காக அந்நாள் வேளாண்துறைச் செயலாளரை அழைத்திருக்கிறார். முழுக்க முழுக்கச் செயலாளர் இந்தியிலேயே விளக்கியிருக்கிறார். இடைமறித்த நிதியமைச்சர் “எனக்கு இந்திதெரியாது; உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமல்லவா?”என்று கேட்டிருக்கிறார். “ஆம் தெரியும்; ஆனாலும் நான் இந்தியில்தான் விளக்குவேன்” என்றாராம் செயலாளர். “சரி! ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்துக்கொள்ளலாம்” என்று இன்னொரு செயலாளரை அழைத்தாராம் நிதியமைச்சர். ‘மொழிபெயர்ப்பாளர் வைத்து நிதியமைச்சர் என்னை அவமதித்துவிட்டார்’ என்று இந்திய ஆட்சிப் பணியாளர் சங்கத்தில் முறையிட்டாராம் அந்த மூத்த செயலாளர். ஆட்சி உலகத்துக்கும் அறிவுலகத்துக்குமே இந்நிலை என்றால், இந்தி ஆதிக்கச் சூட்டை நீங்கள் வெப்பமானி இல்லாமலேயே விளங்கிக் கொள்ள முடியும்.
தமிழும் சமஸ்கிருதமும்தாம் இந்தியாவின் மூத்த மொழிகள். சமஸ்கிருதம் வழக்கிழந்துவிட்டது; தமிழ் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழின் தொன்மையை உலகுக்கு நாம் உணர்த்த வேண்டும். “இன்று உலக மொழியென்று பேசப்பெறும் ஆங்கிலத்தின் முதல் எழுத்துருகி.பி 7ஆம் நூற்றாண்டில்தான் அறியப் பெற்றது. இன்று தொழில்நுட்ப மொழியாக உயர்ந்து நிற்கும் ஜெர்மானிய மொழியின் எழுத்து வடிவம் கி.பி 8ஆம் நூற்றாண்டில்தான் எட்டப்பட்டது. பண்பாட்டு மொழியென்று கருதப்படும் பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம் கி.பி 9ஆம் நூற்றாண்டை ஒட்டியதாகும். இன்று அறிவியல் மொழியாக வளர்ந்து நிற்கும் ரஷ்ய மொழியின் முதல் எழுத்துச் சான்று கி.பி 10ஆம் நூற்றாண்டில்தான் பார்க்கப்பட்டது. லத்தீனின் பேச்சு மொழியிலிருந்து பிறந்து இன்று இசை மொழியென்று இசைபடவாழும் இத்தாலி எழுத்து வடிவில் அறியப் பெற்றது கி.பி 10ஆம் நூற்றாண்டில்தான்.
ஆனால், தமிழ் மொழியின் ஆதி இலக்கணம் என்று அறியப் பெற்ற தொல்காப்பியம், கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது அறிவுலகத்தால் மெய்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை. (தமிழாற்றுப்படைமுன்னுரை)
இத்துணை தொன்மை மிக்க மொழியை நேற்று வந்த மொழிகள் உரசிப் பார்ப்பதற்கும் ஊடுருவப் பார்ப்பதற்கும் உடன்படோம். இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம்; தமிழோ பேரடையாளம்.!” இவ்வாறு கவிஞர் வைரத்து தெரிவித்துள்ளார்.