கேரளா சிறையில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு.. 145 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபற்றி சுகாதார மந்திரி சைலஜா வெளியிட்ட செய்தியில், நேற்று ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், மொத்த எண்ணிக்கை 44,415 ஆக உயர்ந்தது.ஒரே நாளில் 803 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது. 156 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆட்சியர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட 6 மந்திரிகள் மற்றும் கேரள மாநில டி.ஜி.பி. உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் மத்திய சிறையில் 359 கைதிகளுக்கு கடந்த ஒரு வாரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் ஒருவர் சிறை ஊழியர் ஆவார்.இவர்களில் கொலை குற்றவாளி ஒருவர் கொரோனாவுக்கு இன்று உயிரிழந்து உள்ளார். இதனை சிறை கண்காணிப்பாளர் சந்தோஷ் இன்று உறுதிப்படுத்தி உள்ளார். 145 பேருக்கு பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரை தவிர மற்ற அனைவரும் சிறைக்குள்ளேயே ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.