“யோகியின் ராம ராஜ்ஜியத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் ஓய்வதில்லை”

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள காங்கிரஸ், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை உச்சமடைந்துள்ளதாக கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பகாரியா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று கரும்பு தோட்டம் ஒன்றில் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக உறவினர்கள் கூறினர். இதனை மறுத்துள்ள போலீசார், சிறுமியின் கொலை தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவை போடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய மாநில காங்., தலைவர் அஜய் குமார் லல்லு, “யோகியின் ராம ராஜ்யத்தில், அப்பாவி சிறுமிகளுக்கு எதிரான கொடூர குற்றங்களுக்கு ஓய்வு இல்லை. மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது மாநிலத்திற்கே அவமானம். பெண்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே அவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். குண்டர்களின் கொட்டம் சாலைகளில் அதிகரித்துள்ளது.” என கடுமையாக விமர்சித்தார்.