7 மாதங்களுக்கு பின் பனியில் இருந்து மீட்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

ஜம்மு – காஷ்மீரின், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், ஜனவரி மாதம் பனிக்குள் விழுந்த ராணுவ வீரரின் உடலை, ஏழு மாதங்களுக்கு பின், சக வீரர்கள், நேற்று முன்தினம் மீட்டனர்.

உத்திரபிரதேச மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் நேகி, 36. இவர் மனைவி ராஜேஸ்வரி தேவி மற்றும் மூன்று குழந்தைகளுடன்,உத்தரகண்டின் டேராடூனில் வசிக்கிறார். இந்திய ராணுவத்தில், 2001ல் இணைந்த ராஜேந்திர சிங், ‘கார்வால் ரைபிள்ஸ்’ பிரிவில், ஹவில்தாராக பணியாற்றினார்.

கடந்த ஜனவரி, 8ம் தேதி, ஜம்மு – காஷ்மீரின் குல்மார்க் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பணியில் இருக்கும் பொழுது, அடர் பனிக்குள் விழுந்தார். அவரை, மூன்று மாதங்கள் வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், பணியில் வீர மரணம் அடைந்ததாக, ராணுவத்தினர் முடிவு செய்தனர். இது குறித்து, ஜூன் மாதம் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ராணுவத்தின் முடிவை ஏற்க மறுத்த, அவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, ‘கணவரின் உடலை பார்த்தால் மட்டுமே, அவர் மரணம் அடைந்தாக ஒப்புக் கொள்வேன்’ என்றார்.

இந்நிலையில், கார்வால் ரைபிள்ஸ் படை பிரிவினர், மாயமான ராஜேந்திர சிங்கின் உடலை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பனிக்கட்டிகளின் அடியில், நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர். இதுகுறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் அங்கு வந்து, உடலை பதப்படுத்தி, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். நாளை மறுநாள், குடும்பத்தினரிடம், ராஜேந்திர சிங்கின் உடல் ஒப்படைக்கப்படும் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x