ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வாங்கி விட்டதா பதஞ்சலி நிறுவனம்? பாபா ராம்தேவ் விளக்கம்..!

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் 53 நாட்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் டைட்டிலுக்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பித்து வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு யோகா குரு ராம்தேவ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ஏலம் எடுக்க, மற்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வராவிட்டால் மட்டுமே, பதஞ்சலி நிறுவனம் அதற்கான முயற்சி எடுக்கும் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதற்காக பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “சீன நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன். சீன மொபைல் உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ நிறுவனம் ரத்து செய்தது. அதன்பிறகு ஐபிஎல் டைட்டிலை பதஞ்சலி நிறுவனம், ஏலத்தில் எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சீன தயாரிப்புகளை கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளுடன் தொடர்புபடுத்துவதை மக்கள் விரும்பவில்லை. இது இந்தியர்கள் நம் நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க குரல் கொடுப்பதை தெளிவாக காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.