ஓராண்டாகியும் காஷ்மீரில் 4ஜி சேவை வழங்காத அரசு – கண்டிக்காமல் இருக்கும் சுப்ரீம் கோர்ட்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது தடை செய்யப்பட்ட 4ஜி மொபைல் இணைய சேவை கொரோனா காலத்திலும் வழங்கப்படாமல் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயலில் மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை சுப்ரீம் கோர்ட்டோ கண்டிக்காமல் உள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு, மொபைல் இணையதள சேவைக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறியது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மொபைல் இணைய வேகம் இன்னும் அதிகரிக்கப்படாமல் 2ஜி அளவிலேயே உள்ளது.
இதன் காரணமாக கொரோனா தொற்றுநோய் குறித்த சமீபத்திய தகவல்கள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் அணுக முடியவில்லை என்று கூறி 4ஜி இணைய வேகத்தை வழங்க உத்தரவிடுமாறு மீடியா பணியாளர்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மே 11-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் இணைய வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக மத்திய மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றது.
தடை உத்தரவு போட்டவர்களிடமே முடிவு எடுக்கும் படி சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவு விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அந்த உத்தரவையும் மத்திய அரசோ, யூனியன் பிரதேச அரசோ நிறைவேற்றவில்லை. உயர்மட்டக் குழு எந்த கூட்டங்களையும் நடத்தவில்லை, எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என ஜூன் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, 4ஜி சேவை அளிப்பதில் பிரச்னையில்லை ஆனால் இணைய வேகம் 2ஜி அளவில் இருக்கும் பொழுதே இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமாபாத் தொடர்கிறது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் 4ஜி சேவையை மீண்டும் வழங்குவதற்கான சாத்தியத்தை மத்திய அரசு ஆராய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் இன்று (ஆக., 11) இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆகஸ்ட் 16 முதல் சோதனை அளவில் இரண்டு மாவட்டங்களில் முதலில் 4ஜி தடை நீக்கப்படும் என கூறினார்.