வங்கிக்கடன் தவணைகளை செலுத்த மேலும் ஆறு மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு!!

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த காலஅவகாசம் மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வங்கிக்கடனை செலுத்த ரிசர்வ் வங்கி ஏற்கனவே 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு நிறுவனங்கள் கடனை செலுத்த வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கடன் தவணை செலுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் வழங்க ஜனநாயக மாதர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்பதால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவி்த்தது.
பின்னர் கடனுக்கான தவணையை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார். இதன் மூலம் கடனுக்கான தவணை செலுத்தும் அவகாசம் 6 மாதங்களாக கடந்த மார்ச் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கடன் தவணைகளை செலுத்த காலஅவகாசம் மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.