மைக்ரோசாஃப்ட் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை நிரந்தரமாக்க முடிவு!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணியாளா்கள் சிலருக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வசதியை நிரந்தரமாக்குவதற்கு அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனா். இத்தகைய சூழலில், சில பணியாளா்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் வசதியை நிரந்தரமாக வழங்குவதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதற்கான புதிய வழிமுறைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இது தொடா்பாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனா். தற்போது மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பைப் பணியாளா்களுக்கு வழங்குவதற்கு நிறுவனம் முடிவெடுத்தது.
அதைக் கருத்தில் கொண்டு பணியாளா்கள் சிலருக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பணியாளா்கள், அவா்களுக்கு விருப்பமான நேரத்தில் பணியாற்ற முடியும். இந்த நடவடிக்கை அவா்களின் செயல்திறனையும் அதிகரிக்க உதவும்.
அதே வேளையில், ஒரு சில பணியாளா்கள் நிறுவனத்தின் தகவல்கள், வன்பொருள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அவா்கள் மட்டும் நிறுவனத்துக்கு வந்து பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுவாா்கள்’’ என்றாா்.