இனி வீட்டு வாசலுக்கே வந்து மின் கட்டண வசூல்!! மின்வாரியம் புது திட்டம்

டிஜிட்டல் முறையில், வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் வசதியை, மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள் நேரில் வந்து, மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். மின் கட்டணத்தை, மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ-சேவை’ மையங்கள், தபால் நிலையங்களில் செலுத்தலாம். மேலும், வாரிய இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம்.
சட்டசபையில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி வாயிலாக, கிரெடிட், டெபிட் கார்டுகளில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், வீட்டு வாசலிலேயே வசூல் என்ற, கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும். ‘இந்த வசதி, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் கட்டணத்தை இலகுவாக செலுத்த ஏதுவாக இருக்கும்’ என, மின்துறை அமைச்சர் தங்கமணி, மார்ச் மாதம் அறிவித்தார்.
இதற்காக, ஊழியர்களிடம், பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும். அவர்கள், மின் பயன்பாடு கணக்கெடுத்து, கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கும் போது, பணம் செலுத்த விரும்புவோர், உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.’கியு ஆர் கோடு’ என்ற ரகசிய குறியீட்டை, மொபைல் போனில், ‘ஸ்கேன்’ செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.