“மோடி ஜீ எதனால் மிகவும் பயப்படுகிறீர்கள்?” ராகுல் தாக்கு!

கடந்த 6 மாதங்களாக, இந்திய எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்ற மத்திய இணையமைச்சரின் கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில், ராகுல் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா எல்லையில், சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய நிலப்பரப்பில் பல இடங்களை சீனா கைப்பற்றியதை ஒப்புக் கொள்ளும் வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பரப்பளவில் சீனா சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் சீன எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் எந்த நிலையையும் எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘பாகிஸ்தானால் கடந்த ஏப்ரலில் அதிக அளவில் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 47 முறை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. ஆனால் சீனாவை பொறுத்தவரை இந்திய-சீன எல்லையில் கடந்த 6 மாதமாக எந்த ஊடுருவலும் இல்லை. கடந்த 3 ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 594 முறை ஊடுருவல் முயற்சி மேற்கொண்டது”என குறிப்பிட்டு இருந்தார்.
இணை அமைச்சரின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீன எல்லையில் இருந்து தினம் தினம் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தரப்பில் இப்படி ஒரு தகவல் வெளியிட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “ பிரதமர் மோடி யாரும் எல்லையை தாண்டி வரவில்லை என்கிறார். பின்னர் சீன வங்கியிடம் இருந்து மிகப்பெரிய கடனை வாங்குகிறார். பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளாக தெரிவித்தார். தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் எந்த ஊடுருவலும் இல்லை என்கிறார். பிரதமர் மோடி அரசானது இந்திய ராணுவ வீரர்களின் பக்கம் உள்ளதா அல்லது சீனாவின் பக்கம் உள்ளதா? மோடி ஜீ எதற்கு மிகவும் பயப்படுகிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்