அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக வரும் கருத்துக் கணிப்புகள்… மகிழ்ச்சியில் குதிக்கும் ஜோ பிடன்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்புக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு நாளை (நவம்பர் 03) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையாக கொரோனா தொற்று, இனவெறித் தாக்குதல் போன்றவை எதிரொலிக்கிறது. தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த பிரச்சனைகள் அதிகம் பேசப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்கு எண்ணிக்கை குறையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், தபால் வாக்கு மற்றும் தேர்தலுக்கு முந்தைய வாக்களிக்கும் முறைகளுக்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்து விட்டனர்.
வழக்கமாக நடைபெறும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில், பெரும்பாலும் ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். என்பிசி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பிலும், ஜோ பைடன் 10 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார். அதேபோல் தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும், ஜோ பைடனுக்கு ஆதரவாக 52 சதவீத பேரும், அதிபர் டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர்.
முக்கிய மாகாணங்களான அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனோ, மினசோட்டா, வட கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஜோ பைடனுக்கு ஆதரவாக 51 சதவீத வாக்காளர்களும் உள்ளனர். முன்கூட்டியே வாக்களித்தவர்கள் அதிகம் பேர் ஜோ பைடனுக்கு ஆதரவாக உள்ளனர். வாக்களிக்காமல் இருப்பவர்கள் டிரம்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.