சசிகலாவுக்கு வரவேற்பு : காவல்துறை விடுத்த மறைமுக எச்சரிக்கை..!

சென்னை உள்ளிட்ட இடங்களில சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்து அறிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற அமைப்பினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாக கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது.
இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை (8-ம் தேதி ) அவர் சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியில் இருந்து பிரத்யேக காரில் அ.தி.மு.க கொடி பறக்கும் கார் அல்லது வேனில் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்வதாக தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டி புகார் அளித்த்துள்ள நிலையில், காவல் துறை தரப்பிலிருந்து, இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.