கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு 3 மாதத்தில் ஏற்பட்ட மறு தொற்று

உலகில் முதல் முறையாக ஹாங்காங்கில் தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு மூன்று மாதத்தில் மீண்டும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கை சேர்ந்த 33 வயது ஐ.டி., ஊழியர் ஐரோப்பாவிலிருந்து இந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிந்தது. அவருக்கு முதல் முறையாக ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து குணமானவருக்கு அடுத்த சில மாதங்களில் மறு தொற்று ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம் மரபணு பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் தற்போது வேறு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதன் மூலம் உலகில் முதல் முறையாக கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மறு தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாதது என ஏற்கனவே அமெரிக்க தொற்று நோய்கள் சங்கத்தின் தலைவரும் கூறியுள்ளார். தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாலும், கொரோனா தொற்று மனிதர்களிடையே நீடிக்கக்கூடும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மறு தொற்று பெரும்பாலும் அறிகுறியற்றே ஏற்படும். மறு தொற்றுக்குள்ளாகுபவர் இதுவரை தொற்று ஏற்படாதவருக்கு நோயை பரப்புவார். இயற்கையாக ஏற்படும் தொற்று, நோயிலிருந்து பாதுகாக்கும். ஆனால் மறு தொற்று ஏற்படுவதை தடுக்காது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.