“மம்தா பானர்ஜியின் அலட்சியம், விவசாயிகளுக்கு 8400 கோடி இழப்பு” கவர்னர் ஜகதீப் தன்கர்

மத்திய அரசின் பிரதமர் – விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதை அடுத்து அம்மாநில விவசாயிகள் 8400 கோடி ரூபாய் உதவி தொகையை இழந்துள்ளனர்’ என கவர்னர் ஜக்தீப் தன்கர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது.இம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதினார். அதன் விபரம்: மத்திய அரசு வழங்கும் பிரதமர் – விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் 92000 கோடி ரூபாய் நிதி உதவியை பெற்றுள்ளனர். ஆனால் மேற்கு வங்க அரசு அத்திட்டத்தை நிறைவேற்றாததால் இம்மாநிலத்தை சேர்ந்த 70 லட்சம் விவசாயிகள் உதவித் தொகையை இழந்துள்ளது அதிருப்தி அளிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தன் ‘டுவிட்டர்’ சமூகவலைதள பக்கத்தில் கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று எழுதிய பதிவில் ‘மேற்கு வங்க அரசின் அலட்சியத்தால் மத்திய அரசு வழங்கும் பிரதமர் – விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் இம்மாநில விவசாயிகள் 8400 கோடி ரூபாய் உதவி தொகையை இழந்துள்ளனர்’ என குறிப்பிட்டார். இது குறித்து மாநில அமைச்சரும் திரிணமுல் காங்.,கின் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹகீம் கூறுகையில் ”கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்காக மாநில அரசு வழங்கி வரும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு கவர்னர் இதுபோன்ற கருத்துக்களை கூற வேண்டும்” என்றார்.