சி.ஏ.ஏ எதிர்ப்பு மாணவி கைது

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின்(Jamia Coordination Committee), ஊடக தொடர்பாளர் சபூரா சர்க்காரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக, டில்லி ஜாமியா பல்கலை., மாணவர்கள், கடந்த ஆண்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் அமைதியாக போய்கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினரின் திட்டமிடப்பட்ட வன்முறையால் திசைமாறியது. வடகிழக்கு டில்லியில் நான்கு நாட்கள் பா.ஜ.கவினர் நடத்திய வன்முறைத் தாக்குதலில் பொதுச் சொத்துக்கள், தனியார் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. உளவு பிரிவு போலீசார் இரண்டு பேர் உட்பட 54 பேர் இக்கலவரத்தில் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நாட்டின் கவனம் முழுக்க கொரோனா பக்கம் திரும்பியுள்ள நிலையில், சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களை, குறிப்பாக மாணவர்களை மத்திய அரசு கைது செய்யத் தொடங்கியுள்ளது. வன்முறை சதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் ஜாமியா பல்கலை.,யின் ஆய்வுப் பிரிவு மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், வட கிழக்கு டில்லியின், ஜாப்ராபாத் பகுதியில், பெண்களை திரட்டி, சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக, ஜாமியா பல்கலை., மாணவி சபூரா சர்க்காரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
PTI