லவ் ஜிகாத் பேரில் மனைவியைக் கணவனிடமிருந்து பிரித்த அவலம்!! போலீஸை கண்டித்த நீதிமன்றம்..

உத்தர பிரதேசத்தில் பஜ்ரங் தள அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பேரில் இந்துப் பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.
உ.பி., மாநிலம் முரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி (22). இவரும் ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிச., 6-ம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சென்றுள்ளனர். அப்போது பஜ்ரங் தள் அமைப்பினர் அப்பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது திருமணம் லவ் ஜிகாத் என்று புகார் கூறினர்.
வழக்கு பதிந்த கந்த் போலீசார், பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் மற்றும் மைத்துனரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு முரதாபாத் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் பிங்கி, தான் விருப்பப்பட்டு ரஷீத்தை திருமணம் செய்ததாகவும், மேஜர் என்றும் கூறினார். இதனை கேட்ட நீதிமன்றம் அவரை கணவர் வீட்டிற்கு செல்ல அனுமதித்தது. போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்தது.