“விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பாரா ரஜினி”? – ஜி.ராமகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு எதிராக ரஜினி குரல் கொடுப்பாரா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் மணலி மார்க்கெட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வேளாண் விளை பொருட்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் திட்டம்தான் இந்த வேளாண் திருத்த சட்டம். விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்து வருவதால் வருகிற 8-ந்தேதி இமயம் முதல் குமரி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 5 இடதுசாரி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளது.
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த், விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பாரா?. தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த வேளாண் சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்து விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.