8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!!

மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயின்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று அவை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், “அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்கிறேன்” என உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாநிலங்களவை கூடியதும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை அவைக்குள் வரப்போவதில்லை எனத் தெரிவித்துச் சென்றனர். காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து ஆம் ஆத்மிகட்சி, திரிணமூல் காங்கிரஸ், இடது சாரிகள் வெளியேறினர். சிறிது நேரத்தில் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி.க்களும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

முன்னதாக மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் கூறுகையில், “சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை அவைக்குள் வரப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக தனியார் கொள்முதல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு மசோதா கொண்டு வர வேண்டும்.
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த வழிகளை பின்பற்ற வேண்டும், அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகம் கூட குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழாக கொள்முதல் செய்யக்கூடாது. இந்த விதிகளை ஏற்று மத்திய அரசு மசோதா கொண்டு வர வேண்டும்’ எனக் கூறி வெளிநடப்பு செய்தார்