இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா.. இந்திய மக்கள் அச்சப்பட வேண்டாம்!!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசால் இந்திய மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதியவகை பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன.
இந்தியா, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, துருக்கி என பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. புதிய கொரோனா வைரசால் உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தில் புதியவகை கொரோனாவால் இந்திய மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் நன்கு அறிவோம். மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தான் நான் கூறுவேன் என்றார்.