இம்முறை கோவை மாணவியின் உயிரை பறித்த நீட்

நீட் தேர்வில் முதல் முறை தோல்வியடைந்த கோவை மாணவி ஓராண்டாக மீண்டும் பயிற்சி பெற்று வந்த நிலையில் தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை, ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள், சுபஸ்ரீ (19). நாமக்கல் மாவட்டத்தில் சி.பி.எஸ்.சி., பாடப் பிரிவில் பிளஸ் 2 முடித்த இவர், கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், 451 மதிப்பெண்கள் பெற்றவருக்கு பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. இருப்பினும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேண்டும் என, கோவையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வில் இம்முறையும் எம்.பி.பி.எஸ்., கல்விக்கு தகுதி பெறுவோமா மாட்டோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான சுபஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.