இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த ஏரி..? சமூக வலைத்தளத்தில் வைரல்..

ராசல் கைமாவில் உள்ள ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதன் புகைப்பட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ராசல் கைமா பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் ஏரியை படத்தில் காணலாம்.

ராசல் கைமாவில் அம்மார் அல் பர்சி (வயது 19) என்ற மாணவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது ஆளில்லா விமானம் மூலம் ராசல் கைமாவின் அல் ரம்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள கடற்கரை பகுதியில் சரயா தீவில் ஆளில்லா விமானத்தை வைத்து சோதனை செய்தபோது எதிர்பாராத வகையில் ஏரி ஒன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதை கவனித்தபோது அந்த ஏரியின் அகலம் 10 மீட்டராகவும், நீளம் 40 மீட்டராகவும் உள்ளது.

உடனடியாக அவர் இந்த ஏரியின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததால், இந்த படங்கள் அனைத்தும் வைரலாக பரவியது.

ஹாலோ பாக்டீரியா மற்றும் துனெலியல்லா சலினா என்ற பாசியின் காரணமாகவும், சிவப்பு பாசியில் இருந்து சுரக்கும் நிறமியின் காரணமாகவும் இந்த ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

ஜோர்டான் பகுதியில் இறந்த கடல் என அழைக்கப்படும் உப்பு ஏரியிலும் இதுபோன்ற பாக்டீரியா இருப்பதால் அந்த பகுதியும் இதுபோன்ற நிறத்தில் அவ்வப்போது காணப்படும். மேலும் இதுபோன்ற சூழ்நிலையானது குறிப்பாக குளிர்காலத்தில் மட்டுமே அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து ராசல் கைமா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் டாக்டர் சைப் அல் கைஸ் கூறும்போது, ‘‘இந்த ஏரி பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருப்பதால் அங்குள்ள தண்ணீரானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எனினும் இந்த தண்ணீரின் நிறம் மாறியுள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னரே இதன் உண்மை நிலவரம் தெரிய வரும்’’ என்றார்.

இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஏரியை பார்வையிட பொதுமக்கள் அந்த பகுதிக்கு அதிகமாக செல்ல தொடங்கியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x