“விவசாய சந்தையை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்” – ராகுல் காந்தி

‘புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டினார்.
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் காங். – எம்.பி. ராகுல் நேற்று பேசியதாவது:
மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களில் முதலாவது சட்டம் விவசாய சந்தையை முற்றிலுமாக அழித்துவிடும். பணக்காரர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்கு உணவு தானியங்களை வாங்கிக் குவிக்க இரண்டாவது சட்டம் வழிவகுக்கும். இந்த இரண்டு சட்டங்கள் வாயிலாக உணவு தானியங்கள் காய்கறிகளின் விலை பெரும் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாய விளை பொருட்களுக்கான உரிய விலை விவசாயிகளை சென்று சேர கூடாது என்பதே பா.ஜ. அரசின் நோக்கமாக உள்ளது. இதை எதிர்த்து போராடுபவர்களை தீவிரவாதி என்று பிரதமர் மோடி அழைக்கிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கும் வேலையை தான் மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.