கதவுகள் உடைக்கல.. லாக்கர் திறக்கல.. 14 கிலோ தங்கம் கொள்ளை!! கடையின் உரிமையாளர் கதறல்..

சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலை வீரப்பன் தெருவில் உள்ள சங்கம் கிராப்ட் என்ற மொத்த வியாபார தங்க நகை கடை 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்களாக ராஜ்குமார் (வயது 47), சுபாஷ் போத்ரா (38) ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் என கூறப்படுகிறது
இந்த நகை கடையானது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்பட்டு தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டி விற்பனை செய்தது போக மீதி உள்ள நகைகளை மீண்டும் லாக்கரில் வைப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டிவிட்டு 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை லாக்கரில் பூட்டி விட்டு உரிமையாளர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டுவதற்காக லாக்கரை திறந்து பார்த்தபோது, உள்ளே நகைகள் மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ்போத்ரா ஆகியோர் யானைகவுனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக யானைகவுனி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் இணை ஆணையர் பாலகிருஷ்ணன், போலீஸ் உதவி ஆணையர் (பொறுப்பு) விஜயராமலு ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு கடையின் கதவுகள் மற்றும் நகை இருந்த லாக்கரின் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. போலியான சாவியை பயன்படுத்தி லாக்கரை திறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் கடையின் வெளி சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.