ஹலோ ஆப் மூலம் பழகி டார்ச்சர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு ஹலோ ஆப் மூலம் பழக்கமான நபர் தான் திருமணமானதை மறைத்து காதல் வலை வீசியுள்ளார். இதை அறிந்து அப்பெண் விலகியதால் டார்ச்சர் தந்துள்ளார். இதில் அவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் பாரதி (24). இவருக்கு சில மாதங்களுக்கு முன் ‘ஹலோ ஆப்’ மூலம், விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமரேசன் (32) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராணுவ வீரரான அவர், நாக்பூரில், ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நவ.,18ம் தேதி சென்னை வந்த அவர், தாம்பரத்தில் பாரதியை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முத்துக்குமரேசனுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பது, பாரதிக்கு தெரியவந்தது. இருப்பினும், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, பாரதியை அவர் வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த, 2ம் தேதி, பாரதியை வீடியோ கால் மூலம் அழைத்து, திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். தன்னை தொடர்ந்து வற்புறுத்தினால், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என பாரதி கூறியுள்ளார்.
அதற்கு, முத்துக்குமரேசன், ‘துாக்குபோட்டு தற்கொலை செய்துக்கொள்’ என நக்கலாக கூறியுள்ளார். அவர் முன்னிலையில், பாரதி துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பாரதியின் வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதன் மூலம், முத்துக்குமரேசன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.