சிறையில் இருந்த உறவினரை பார்க்க சென்ற பெண்ணை சிறைக்குள் அடைத்த போலீசார்!

சிறைக்கு கைதியை பார்க்க சென்ற உறவுக்கார பெண் ஒருவர் க்ரீம் பிஸ்கட்டில் கஞ்சாவை திணித்து கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எண்ணூரில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக கார்த்திக் (எ) குள்ள கார்த்திக் என்பவரும் பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக அவரது உறவுக்கார பெண் வளர்மதி (21) என்பவர் சென்று இருந்தார். அப்போது பிஸ்கட், பழம் ஆகியவற்றைக் கொண்டுச் சென்றார். அவற்றை போலீஸார் சோதனை செய்ததில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பரிசோதனை செய்தபோது க்ரீம் பிஸ்கெட்டுக்குள் கஞ்சா திணித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கஞ்சா எடுத்து வந்தவர் கார்த்திக்கின் உறவினர் என்பதும், பிஸ்கெட்டுக்குள் 50 கிராம் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.