நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு!!!

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருந்த 663 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017 செப்டம்பர் 23-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
2018 ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை 2018 ஆகஸ்ட் 13-ல் மேற்கொண்டு, 2018 அக்டோபர் 12-ம் தேதி தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.2018 அக்டோபர் 12-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வுப் பட்டியலில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தகுதியாக CPED, DPED படித்தவர்கள் இடம்பெறாததைக் கண்டித்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு CPED, DPED படிப்பையும் கவனத்தில் கொண்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது. 663 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில், 551 பேர் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
சிறப்புப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை கவனத்தில் கொண்டு, எஞ்சிய இடங்களுக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லாததால் அவர்களுக்கான இடங்களில் யாரையும் தேர்வு செய்யாமல் நிறுத்தி வைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.தேர்வில் தேர்ச்சி பெற்ற 52 பேரை தகுதியற்ற படிப்பு காரணமாக பட்டியலில் இருந்து நீக்கியும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்ற 551 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
கலந்தாய்வு குறித்து தேர்வுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு தகவல் அனுப்பவும், சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் பணி நியமன ஆணையை வழங்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.