எல்லையில் இந்திய ராணுவத்தை திசைதிருப்ப, பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீன ராணுவம்!!

இந்தியா – சீனா இடையில் எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, அதிக சத்தத்துடன், பஞ்சாபி பாடல்களை சீன ராணுவத்தினர் ஒலிபரப்பி வருகின்றனர். இது இந்திய ராணுவத்தை திசைதிருப்ப சீன ராணுவத்தினர் செய்யும் மறைமுக தந்திரம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் கிழக்கு பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாங்கோங் சோ ஏரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன வீரர்கள் உயிரிழந்திருந்தாலும் அதனை அந்நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ‘பிங்கர் -4’ பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களை நோக்கி, லவுட் ஸ்பீக்கர்கள் மூலம் பஞ்சாபி பாடல்களை சீன வீரர்கள் ஒலிக்கவிட்டனர். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகையில், “பஞ்சாபி பாடல்களை ஒலிக்கவிட்டு, இந்திய ராணுவத்தினரின் கவனத்தை திசைதிருப்ப சீன ராணுவத்தினர் முயற்சி செய்துள்ளனர். இதுவும், சீன ராணுவத்தின் உளவியல் ரீதியாக யுத்தங்களில் ஒன்றாகும் கடந்த காலங்களிலும் இதனை செய்துள்ளது. கடந்த 1962 ம் ஆண்டு போருக்கு முன்னர், ஹிந்தி பாடல்களை ஒலிக்க விட்டனர்.
இதன் மூலம் உங்கள் மொழி எங்களுக்கு தெரியும் என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு செய்கின்றனர். அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம், இந்திய ராணுவத்தினரை திசைதிருப்புவதற்காக மட்டுமல்லாமல், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எங்களுக்கு புரிகிறது. அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்பதை, இந்திய ராணுவத்திற்கு தெரியப்படுத்த விரும்புகின்றனர்.
லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழிகளில் தான் பேசி வருகின்றனர். கடந்த காலங்களில் ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழி பாடல்களை பாடிய போது, சீன வீரர்கள் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சமீபத்திய நிகழ்வுகளை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதை இந்திய வீரர்களுக்கு தெரியபடுத்த விரும்புகின்றனர்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.