கொரோனா மருந்து ரகசியங்களை திருடும் ரஷ்யா; பரபரப்பு தகவல்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மீது இன்டர்நெட் சைபர் தாக்குதலில் ஈடுபட்டு, தடுப்பு மருந்துக ரகசியங்களை திருடும் முயற்சியில் ரஷ்ய ஹேக்கர் குழுவினர் இறங்கியுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா, இணையம் வழியாக, ஹேக்கர்களை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணிகளை ஹேக் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்யா, அறிவு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் வியாழனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “வசதியான கரடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஏ.பி.டி29 என்ற ரஷ்ய ஹேக்கிங் குழு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கம், ராஜதந்திரம், அறிவு தளம், சுகாதரம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றை முக்கிய இலக்காக வைத்து அறிவுசார் சொத்துக்களைத் திருடுகிறது. இதில் ‘வசதியான கரடி’ எனும் ஹேக்கிங் குழு ரஷ்ய உளவுத்துறையுடன் கைக்கோர்த்துக் கொண்டு 2016 அமெரிக்க தேர்தலில் தலையிட்டதாக நம்பப்படுகிறது.
எனவே தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களை இவை தொடர்ந்து குறி வைக்கும். இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை கனடா நாட்டு தொடர்பு பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஆகியோரும் ஆதரிக்கின்றனர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது