ஸ்டெர்லைட் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டத்தில், காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும், ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக, வேதாந்தா நிறுவனம், கடந்த 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 14 பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.