“நீங்க உங்க வேலைய பாருங்க… நா என் வேலைய பாக்குறேன்” டிரம்புக்கு தக்க பதிலடி தந்த மேயர்!!

அமெரிக்காவில், போர்ட்லாண்ட் மேயரை, ‘நீ ஒரு முட்டாள்’ என, அதிபர் டிரம்ப் தரம் தாழ்ந்து திட்ட, அதற்கு மேயரின் பதிலடி தற்போது பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபராக போட்டியிடும் டிரம்ப், தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், வாஷிங்டனைச் சேர்ந்த, ‘பேட்ரியாட் பிரேயர்’ அமைப்பினர், ஓர்கான் மாகாணம், போர்ட்லாண்டிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று டிரம்பிற்கு ஆதரவாக, பிரசாரம் செய்தனர்.
அப்போது, அவர்களுக்கு எதிராக, ஜனநாயக கட்சியினர் குரல் கொடுத்ததை அடுத்து, லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லாண்டில் இருந்து வெளியேறினர். அவர்கள் சென்ற, சில நிமிடங்களில், போர்ட்லாண்டில், டிரம்ப் ஆதரவாளரான, ஆரன் ஜே டேனியல்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இரங்கல் தெரிவித்து, டிரம்ப், வெளியிட்ட, ‘டுவிட்டர்’ செய்தியில், ‘வன்முறையை வளர விட்டு வேடிக்கை பார்க்கும் போர்ட்லாண்ட் மேயர், ஒரு முட்டாள்’ என, குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த, போர்ட்லாண்ட் மேயர் டெட் வீலர், ‘டிவி’யில் தோன்றி பேசியதாவது: “அதிபருக்கு உரிய கண்ணியத்தை குலைக்கும் வகையில் பேசியுள்ளீர்கள். அது எந்த வகையில் உங்களுக்கு பயனளிக்கும் எனத் தெரியாது. ஆனால், உங்களின் அடாவடித்தனமான நிலைப்பாடு, எதற்கும் தீர்வாகாது. நான், உங்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகிறேன். ஆனால், உங்கள் பேச்சு அதற்கு உதவாது. நான் என் வேலையை கவனிக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், அப்போது தான், இருவரும் அவரவர் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்க முடியும்.” இவ்வாறு டொனால்ட் டிரம்புக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.