“நீட் தேர்வுக்கும், இந்த தற்கொலைகளுக்கும் முடிச்சு போட வேண்டாம்.. மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோர் தான் பொறுப்பு” – பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோர் தான் பொறுப்பு என்று தமிழக பாஜ பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறினார். தமிழக பாஜ மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு முன்பாக ஒரு ஆண்டுக்கு 5 முதல் 10 மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றது கிடையாது. தேர்ச்சியாகி மருத்துவ கல்லூரிக்கு சென்ற வரலாறு கிடையாது. இதை நிரூபிக்கவும் முடியாது. ஆனால் இப்போது இந்த உள் இடஒதுக்கீடு கிடைக்கிற நிலையில், 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் தமிழகத்துக்கு தந்திருக்கிறார். இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி மட்டுமல்ல உதவி தொகைகளையும் தந்திருக்கிறார்.
இதை கொண்டாட வேண்டிய மாணவ, மாணவிகள் தவறான வழிகளில் செல்லக்கூடாது. ஏறத்தாழ 150 லிருந்து 200 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரிசர்வேஷன் அடிப்படையில் கிடைக்க இருக்கிற வாய்ப்பை புரிந்து கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும். துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
மாணவ, மாணவிகள் தற்கொலை என்பது பல நேரங்களில் பல பரீட்சைகளில் மதிப்பெண் குறைந்திருக்கிறது என்று கூட தற்கொலை செய்கிற மாணவர்களை எல்லாம் பார்த்திருக்கிறோம். அதற்கு பெற்றோர்கள்தான் பொறுப்பு. தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள். அவர்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும்? எப்படி தைரியம் கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் பெற்றோர்கள் தான் செய்ய வேண்டும்.
மொத்தமே அரசிடம் 3500 இடங்கள்தான் இருக்கிறது. அதற்கு ஒரு லட்சத்து 18ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நீட் படித்த உடன் சீட் கிடைத்து விடப் போகிறதா இல்லை. உலகம் எவ்வளவோ பரந்து விரிந்து கிடக்கிறது. அடுத்தடுத்து எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் மாணவர்கள் மனப்பாடம், தேர்வு என்றில்லாமல் பல தரவுகளில் உயர்த்துகிற திட்டத்தை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார். எனவே, நீட் தேர்வுக்கும், இந்த வேதனையான சம்பவத்துக்கும் முடிச்சு போட வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. 106 போட்டி தேர்வுகளில் ஒன்றுதான் இந்த நீட் தேர்வு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.