ஆசையில் திருடி, அனுபவிக்க தெரியாததால் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள போனைத் திருப்பி கொடுத்த திருடன்!!

ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனைத் திருடிச் சென்ற நபர், பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூரில் ஒரு நபர் இனிப்புக் கடைக்குச் சென்றபோது ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை கடையிலேயே மறந்து விட்டு வந்திருக்கிறார். தனது போனைக் காணவில்லை என மீண்டும் இனிப்புக்கடைக்கு சென்று விசாரித்தபோது போன் கிடைக்கவில்லை.

உடனே அதிர்ச்சி அடைந்த நபர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். வேறு எண்களில் இருந்து அந்த நம்பருக்கு தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போனை இழந்த நபர், மீண்டும் அந்த செல்போன் கிடைக்காது என்று எண்ணிய நிலையில், 2 நாட்கள் கழித்து மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் தனது நம்பரைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, போனை எடுத்த திருடன் தனக்கு அந்த போனை பயன்படுத்தத் தெரியவில்லை என்றும், எனவே அதைத் திருப்பித் தர விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், போனை ஒப்படைப்பதற்காக வீட்டு விலாசமும் கேட்டுள்ளார்.
இதைக் கேட்டவுடனே ஆச்சர்யப்பட்ட போனின் உரிமையாளர், பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு, செல்போனை திருடிய நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் எனவும், அவர் செல்போனை மீண்டும் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.