பேருந்து போக்குவரத்து இருக்குமா? – மருத்துவ குழுவுடன் ஆலோசிக்கிறார் முதல்வர்.

ஜூலை 30-ம் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்ய உள்ளார்.
கொரோனா ஊரடங்கு போடப்பட்டு 125 நாட்களை கடந்துவிட்டது. இந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு காலத்திற்கு பிறகு எந்த மாதிரி தளர்வுகள் வழங்கலாம் என மத்திய, மாநில அரசுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கினால் கொரோனா குறைவில்லை, மாறாக பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில், ஜவுளி துறை, சுற்றுலா துறை, சினிமா, ஐ.டி., நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள், திருமணம் சார்ந்த உப தொழில்கள், விவசாயம் என அனைத்து துறையும் அடிவாங்கியுள்ளது.
ஜூலை 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா நிலைமை குறித்து முதல்வர் ஆலோசிக்கிறார். ஜூலை 30-ம் தேதி ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசிக்க உள்ளார். கடந்த முறையே ஊரடங்கை நாங்கள் பரிந்துரைக்கவில்லை என மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். ஆனாலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தொழில் அதிபர்கள், பொருளாதார வல்லுநர்களுடனும் முதல்வர் ஆலோசித்து ஊரடங்கு தளர்வு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.