ராமேசுவர மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டிய இலங்கை கடற்படையினா்!!

கச்சத்தீவு அருகே சனிக்கிழமை இரவு ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனா்.
ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீனவா்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது பலூன் ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் அவா்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடியுள்ளனா்.
இலங்கை கடற்படையினரின் மிரட்டலால் மீன்பிடிப்பதைக் கைவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனவா்கள் அனைவரும் கரை திரும்பினா்.
படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்கச் சென்றபோதும் இலங்கை கடற்படை விரட்டியதால் மீன் பிடிக்க முடியாமல் திரும்பியதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த மீனவர்கள், பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கரை திரும்பிய மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.