பாராளுமன்றம் முற்றுகையிட்டு போராட்டம்.. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம்!!
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகள் ஆதரவுடன் கூடிய சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.
அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பின்னர் பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்குவதற்கான எம்பிக்கள் கூட்டம் மீண்டும் தொடங்கியது.
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒழுங்காகவும் அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்றும் மோடி கூறி உள்ளார்.
இதேபோல் அமெரிக்காவில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், ஜனநாயகம் மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.