உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்!
![](https://thambattam.com/storage/2020/08/Capture-14.jpg)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ‘ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்’ என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக ஏற்கனவே நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த தமிழக அரசின் ஆணை தொடரும்” என்று தீர்ப்பு அளித்ததோடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வேதாந்தா நிறுவனத்தின் மனுவையும் தள்ளுபடி செய்தது.
![](https://thambattam.com/storage/2020/08/5d38fcc762790ac2cc1835d652be8c22f3956c88d19028edaa6106d12bab34d2-300x187.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து தூத்துகுடி மக்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை தொடரும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன