வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!
![](https://thambattam.com/storage/2020/08/CZXC.jpg)
வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை பகுதியில் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவைப் பிடிக்க போலீசார் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். மேலும் ஒரு காவலர் இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தார்.
![](https://thambattam.com/storage/2020/08/sdfadf-300x230.jpg)
இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டு, அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுப்பிரமணியனின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
![](https://thambattam.com/storage/2020/08/CXc-300x200.jpg)
அவரின் இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். மேலும், சுப்பிரமணியனின் உடலை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மற்றும் இதர காவலர்கள் சுமந்து வந்தனர். மயானத்தில் அவரின் உடலுக்கு தெண்மணடல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திய நிலையில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/sdfaf-300x177.jpg)
காவலர் சுப்பிரமணியன் மிகவும் நேர்மையானவர் என்றும், பணிக்குத் தவறாமல் வருபவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதேபோல், குடும்ப நலம் பேணுவது, அக்கம்பக்கத்தில் உள்ள மக்களிடம் பழகுவதிலும் மிகவும் நல்ல அணுகுமுறை உடையவர் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர். இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட டி.ஜி.பி. திரிபாதி சுப்ரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.