“விவசாயிகள் உதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!!
விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் விவசாயிகளுக்கான பிரதமர் உதவி திட்டத்தில் பயன்பெற தகுதியற்ற பல்லாயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் மோசடி நடந்துள்ளது. விவசாயிகளுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் விவசாயத்துக்கு சம்பந்தமில்லாத, நிலமற்ற ஏராளமானோர் பலனடைந்துள்ளனர்.
வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையைச் சார்ந்தவர்கள் புரோக்கர்கள் உதவியோடு, தனியார் இணைய மையங்கள் மூலம் இந்த மோசடியை செய்துள்ளனர். தகுதி படைத்த விவசாயிகள் பலர் இத்திட்டத்தில் சேர முடியாமல் தவித்துவரும் நிலையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு போலியான நபர்கள் இத்திட்டத்தால் பலனடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தண்டிக்கும் வகையில் தமிழக அரசின் அணுகுமுறை இல்லாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் தப்பிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியது. ஆனால், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வரும் செப்.1-ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.