புதுச்சேரியில் துறைமுகம் அருகே தீ விபத்து! 3 மணி நேரமாக போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்!
புதுச்சேரியில் உள்ள பிரபல தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் உள்ள தேங்காய்திட்டு துறைமுகம் அதிக அளவில் சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் இடமாகும். சமீப நாட்களாக வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் இங்கு அதிக அளவில் வர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சரியாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. கட்டுமான நிறுவனத்தின் உள்ளே இருக்கும் பைபர் அட்டை, பஞ்சுகள், மர பெட்டிகள், ரப்பர், டயர்கள், பலகைகள் தீ பிடித்து எரிந்து வருகிறது. இன்னும் இந்த தீயை அணைக்க முடியாமல் 3 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த விபத்தில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.