தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல் உள்ளதன் பின்னணி இதுதானா?
மத்திய அரசே இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என்று அறிவித்த பிறகும் ஏன் தமிழக அரசு அதை ரத்து செய்யாமல் உள்ளது என்பதற்கான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து வெவ்வேறு படிநிலைகளில் ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது என்பதற்காக இந்த இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஆனாலும் பலருக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் இ-பாஸ் கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும் இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் பெற்றுத்தருவது அம்பலமானது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்றால் எதற்காக அந்த நடைமுறை இருக்கவேண்டும் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்பினார்கள். அதே நேரத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது. ஆனாலும் தமிழகத்தில் இன்றளவும் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.
அதற்குக் காரணம் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், மற்ற மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கும், வெளிநாடுகளிலிருந்து இங்கும் வருபவர்களை தனிமைப்படுத்த முகாம்களைத் தமிழக அரசு நடத்திவருகிறது. அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தங்குபவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை தமிழக அரசு சார்பில் உணவுக்காக செலவிடப்படுகிறது. முதலில் இந்த உணவுகள் அனைத்தும் சரியாகத் தரப்பட்டாலும் போகப்போக அதன் தரம் குறைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான வாளி, சோப், குளிக்கத் தேவையான பொருட்கள் உள்ளிட்ட விஷயங்களுகாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாலும் அதில் பணம் கையாடல் நடைபெறுவதாலும் இந்த இ-பாஸ் நடைமுறை இன்னும் நீட்டிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றால் மக்கள் அவதியுற்று வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லாமல் திணறும் இக்காலத்தில் இது போன்று அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் செயலில் தமிழக அரசு ஈடுபடலாமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.