ஆன்லைன் வகுப்பிற்கு பெற்றோரால் செல்போன் வாங்கி தர இயலாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை!

ஒட்டன்சத்திரத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித்தராத பெற்றோருடன் சண்டையிட்ட 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்தா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் ரித்திகா அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு முடித்து விட்டு கொரோனா விடுமுறையில் உள்ள நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவி ரித்திகா தன்னுடைய பெற்றோரிடம் ஆன்லைன் வகுப்பிற்காக புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர். ஆனால் செல்போன் வாங்கித்தருமாறும், செல்போன் இருந்தால்தான் படிக்க முடியும் என்றும் ரித்திகா அவருடைய தாயாரிடம் கூறியுள்ளார். ஆனாலும் ரித்திகாவின் பெற்றோரால் செல்போன் வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் ரித்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தராத காரணத்தால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, கொரோனா மக்களின் வாழ்க்கை போராட்டத்தில் இடையூறாக உள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடரும் இது போன்ற மாணவர்களின் மரணங்கள் நெஞ்சை உலுக்குகிறது.