“கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது!” உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளோடு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி அறிவித்தது.
இதை எதிர்த்து மராட்டியம், டெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, கடந்த 18ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘”கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். ஆனால் கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக் கூடாது. தேர்வு நடத்த இயலாது என முடிவு செய்தால் யுஜிசியை மாநில அரசுகள் அணுகலாம். யுஜிசியை அணுகி தேர்வு நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரலாம். மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.” என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.