நீட் தேர்வு எழுத முடியாத கலக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி…!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன். இரவது மகள் ஹரிஷ்மா (17). பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த ஹரிஷ்மா இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே ஹரிஷ்மாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. பிளஸ் 2- விலும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த அவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டுக்கான ஐ.டி வந்துள்ளது. அதன் மூலம் ஹால்டிக்கெட் எடுத்துக்கொண்டனர். ஆனால், ஹரிஷ்மாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹால்டிக்கெட் ஐ.டியை அவர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் புலம்பித் தவித்துள்ளார். இதனால், ஹரிஷ்மாவைத் திட்டிய அவரது தாய், தானும் அழுது புலம்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்த ஹரிஷ்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஹரிஷ்மாவின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறுகையில்,“ஹால்டிக்கெட் ஐடியை தொலைத்துவிட்டோமே, ஹால் டிக்கெட் கிடைக்காமல், தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நன்றாகப் படிக்கும் மற்றுமொரு மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து, அரசியல் கட்சியினர் உட்படக் கல்வி ஆர்வலர்கள் பலரும் நீட் தேர்வைத் தடை செய்ய வலியுறுத்திப் போராடி வருகிறோம். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது.
ஆவணத்தாங்கோட்டை மாணவருக்குத் திருநெல்வேலியில் தேர்வு, அறந்தாங்கி மாணவருக்கு டெல்லியில் தேர்வு என மாணவர்களை அலைக்கழிக்கின்றனர். ஹரிஷ்மா வயிற்றுவலியால் இறந்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்துள்ளனர். இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும். மாணவர்களின் உயிரைக் கொல்லும் நீட் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்.