மிதக்கும் மும்பை மாநகரம்… கொரோனா மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்…!

மும்பை நகரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் இதுவரை பரவலாக 173 மி.மீ மழை பெய்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வழித்தடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் உள்ளூர் ரயில்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Waterlogging in Nair Hospital. Nair is a COVID-19 hospital. #Mumbai #MumbaiRainsLive #mumbairain #WaterLogging pic.twitter.com/rHn62UubOA
— NavaBharat (@enavabharat) September 23, 2020
இதனிடையே மும்பையில் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் நாயர் மருத்துவமனையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் படுக்கைகள், பிளாஸ்டிக் பொருள்கள், நாற்காலிகள் வெள்ள நீரில் மிதப்பதால் பெரும்பாலான நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சில நோயாளிகளுக்காக மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.