உடுமலை சங்கர் கொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உடுமலை சங்கர் கொலை வழக்கிலிருந்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது பதிலளிக்க கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்த கவுசல்யா மற்றும் சங்கர் தம்பதியினர், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலை பேருந்துநிலையத்தில் நின்றபோது, ஒரு கும்பல் அவர்களை தாக்கியதுடன் கவுசல்யாவின் கணவர் சங்கரை வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில், கவுசல்யாவின் தாய், தந்தை, உறவினர்கள் என் பலர் மீது வழக்கு பதிந்து விசாரித்த காவல்துறையினர், திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதனடிப்படையில் கொலை வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேவேளையில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து தூக்கு தண்டனை பெற்ற 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி எம்.சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கீழமை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மேலும் தூக்கு தண்டனை பெற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேவேளையில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, இவர்களின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும், கொலை குற்றவாளிகளான மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், மதன், ஜெகதீசன் ஆகிய 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன், கவுசல்யா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் விரிவாக விசாரணை மேற்கெள்ளப்பட வேண்டியது என தெரிவித்ததோடு, இதுதொடர்பாக எதிர்மனுதாரர்களான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டடோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.