“நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் இறந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாது!” சபரிமாலா பேட்டி!

நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் இறந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாது என்று பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, “பாலியல் குற்றங்களை தடுக்க ராமி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் இறந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாது. தூக்குக்கயிறு போராட்டம் மூலம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் கடந்த 25 நாட்களில் மட்டும் 5 மாணவ மாணவிகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டும், மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.