வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! உத்தரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!

வாரண்ட் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் யாரையும் தேடவோ, கைது செய்யவோ அதிகாரமுள்ள சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில நீதிமன்றங்களில் கடந்த சில ஆண்டுகளாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கையில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் நுழையும் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதிபதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிபதிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பு படையினர் பணியமர்த்தப்பட வேண்டும் என கூறியிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் 9,919 பேர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர். உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதே இவர்களது பணி. வாரண்ட் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் யாரையும் தேடவோ, கைது செய்யவோ இந்த படையினருக்கு அதிகாரம் உள்ளது என்பதே சிறப்பம்சம். இதுதொடர்பாக உத்தரபிரதேச அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.