“முகலாயர்கள் எப்படி நம் நாயகர்களாக இருக்க முடியும்?” என்று ஆக்ரா அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றிய உ.பி. முதல்வர்!

உத்தரபிரதேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகரத்தில் அம்மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு, சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் முகலாயர் அருங்காட்சியகம் திட்டத்திற்கு முந்தைய அகிலேஷ் யாதவ் அரசு 2015-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. தேசிய தலைநகரான டெல்லியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாஜ்மஹால் அருகே ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முகலாயர்களின் கலாச்சாரம், கலைப்பொருட்கள், ஓவியங்கள், உணவு வகைகள், உடைகள், முகலாய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் நிகழ்த்து கலைகள் ஆகியவை காட்சிப்படுத்தபட உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ஆக்ராவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகியின் தலைமையில் காணொளியில் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் ஆக்ராவின் சிற்பகிராமம் பகுதியில் கட்டப்பட்டு வரும் முகலாயர் அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்ய இருப்பதை அறிவித்தார். இந்த பெயர் மாற்றத்திற்கானக் காரணமாக முதல்வர் யோகி கூறும்போது, “நம் நாயகர்களாக முகலாயர்களை எப்படி கருத முடியும்? இதற்கு தேசியவாதத்தை ஊட்டி, பொதுமக்களின் சுயமரியாதை காத்த மன்னர் சிவாஜியே உகந்தவர்.” எனத் தெரிவித்தார்.
மகராஷ்டிராவில் சிவாஜியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சிவசேனாவுடன் பாஜகவிற்கு கருத்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு அங்கு காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா அமைத்த ஆட்சியே காரணம்.இந்த சூழலில் ஆக்ரா அருங்காட்சியகத்தின் முகலாயர் எனும் பெயர் சத்ரபதி சிவாஜி பெயரில் மாற்றம் செய்யப்படுவது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல், உபியில் முகலாயர் காலங்களின் முஸ்லிம் பெயர்கள் மாற்றப்படுவது முதன்முறை அல்ல. ஏற்கனவே, உபியின் மாவட்டங்களான அலகாபாத்தை பிரயாக்ராஜ் எனவும், பைஸாபாத்தை அயோத்யா என்றும் முதல்வர் யோகியால் மாற்றப்பட்டிருப்பதும் நினைவுகூரத்தக்கது.